Monday, 11 August 2014

அடிமை ஒழிக!

புதிய கீதை -3 (அடிமைத்தனம் ஒழிக)

அடக்கம் அமைதி அழகுதான் பெண்மை.
அடங்க அடிமை பழக்குவது வன்மை.
ஒழுக்கம் பழக்கும் உயர்வுதான் உரிமை.
ஒடுக்கும் பழமை ஒழிந்ததே பெருமை.

மனைவி வந்தவள் மங்கலம் தந்தவளை
துணைவி யானவள் தோழமை
கொண்டவளை.
அடிமை ஆக்குதல் ஆணாதிக்க ஆணவம்.
விடியலைப் பெண்ணே அடைந்ததுதான் நிசம்.

கணவன் என்பதன் கடமைப் பொறுப்பு-
நினைந்து மரியாதை செய்வது
சிறப்பு.
தலைமை என்றத் தலைக்கண வெடிப்பு,
உரிமைப் பறிப்பு என்பதன் கொழுப்பு!

பாசத்தின் அடிமை மோசம் இல்லை.
வேசத்தின் அடிமை தோசம் தொல்லை.
ஆசை மயக்கும் அடிமைக் கொடுமை,
மோசச் செயலது கூசாதார் கயமை.

உண்மை மறந்தும் உறவைப் பிணக்கும்,
தன்மை இழக்கும் பாவக்
கணக்கும்,
உயிரை உயிரே அடிமை யாக்கும்
பயிரை வேலி மேய்வது போலாக்கும்.

மானமும் மனமும் மனிதர் மாண்பு.
நாணமும் நன்றியும் புனிதர் நோன்பு.
அடிமைச் சிறுமை வானமும்
ஏற்காது.
கொடுமைப் பொறுமை கோபம்
தோற்காது.

பெண்ணை மதித்து  தன்னை உயர்த்துவோம்.
விண்ணை வளைத்து விந்தைகள் செய்வோம்.
மண்ணும் விண்ணும் எண்ணும் ஒருமை,
பெண்ணும் ஆணும் சமமெனும் உரிமை.
அடிமை வென்று கடமைகள் நின்றே 
உரிமை சமூகம் வாழ்கவே!

கொ.பெ.பிச்சையா.




  




0

No comments:

Post a Comment