Thursday, 6 November 2014

துணிக எழுக!


துணிக எழுக!

விழுந்தாயா எழுந்தாயா விடைக்கிங்கு நேரமில்லை.
அழுதாயா சிரித்தாயா அதற்கிங்கு அவசியமில்லை.
விழுவதே எழுந்திடத்தான் 
கிடந்தாலும் கேட்பாரில்லை.
விழுந்ததைப் பயிற்சியாக்கு
எழுந்தது முயற்சியாக்கு
விழுவதெதற்கு எழுவததற்கே! அழுவதற்கல்ல எழுகவே!
 
அழுவதெதற்கு சிரிப்பததற்கு 
முடிக்கல்ல துணிகவே!
முடிப்பதற்கும் தொடர்வதற்கும் 
மறக்கல்ல வளர்க்கவே!
மறப்பதற்கும் நினைப்பதற்கும் துறக்கல்ல துலக்கவே!

தவறுமொன்று பழகும்நன்று திருந்துமென்று நிச்சயம்.!
எவருமிங்கு உலகம்கண்டு பிறக்கவில்லை சத்தியம்.
பதறுமொன்று சிதறுமென்று இதயம்கொண்டு துணிகவே!
எதையும்வென்றுஎ
எடுப்பேனென்று இறங்கிச்செய்யத் துணிகவே!

அவசரஉலகம் அவரவ்ர்பணிக்கு அவசியமிருக்கு உணர்கவே!
சுவராய் சும்மா 
இருந்தால் சுமையே! சொரணைமுறுக்கு முனைகவே!.
காலமெவர்க்கும் கைகாட்டியல்ல
 நாளும் அதுவும் 
வேகம் பெருக்கும். 
சூலம் கணித்தும் சுழல்வதில்லை. 
வேலை யொன்றே 
விதியென நெருக்கும்.

மனிதம்கெட்டு புனிதம்பட்டு தர்ம மிங்கே சாகுதே!
இனியும்விட்டு இளமைபட்டு கர்மமென்ன  ஆவதோ!
வினையே!விதியே! வேறேகதியோ விரைவெனப்புயலே  துணிகவே!
துணிக வெழுக தொடர்க இணைக முனைக முடிக்க வெல்க வெல்கவே!

கொ.பெ.பிச்சையா.

Thursday, 9 October 2014

தாயை வணங்கு.


அன்றும் இன்றும்.

இன்னொரு சுதந்திரம் என்பது கோசமே!—அதை
முன்னெடு முன்னேறு வாழ்க தேசமே!—இதை
என்னொடு மந்திரம் தாயை வணங்குவோம்.—அதை
சொன்னதன் தந்திரம் இன்றது முழங்குவோம்.

பட்சிகள் வெள்ளை வந்தன ஆண்டன---இன்று
கட்சிகள் கொள்ளை கொண்டன தின்றன.—அன்று
துச்சம் உயிரென எத்தனை தியாக.ம்!—இன்று.
எச்சம் மயிரென இத்தனை சோகம்!.

தியாகம் ஒன்றே பொது வாழ்வாக---பழைமை
தேர்ந்த அரசியல் தூய்மை அன்று---புதுமை
தலைமை குடும்ப நலமே கொள்கையாக---பழைமை
தொலைத்து தானே வாழ்வது இன்று.

அரசியல் கட்சிகள் ஆயிரம் முளைத்தன—அவை
ஆளுக்கு ஒன்றாய் இலாபம் கொழித்தன---எவை
பங்கு பகிர்வதில் சங்கம் அமையுமோ—அவை
முந்தும் கூட்டணி என்று வயக்கின.

நாய்களென்றும் தமக்குள் நட்புக் கொள்ளாது---அதுபோல்
நாடக அரசியலும் கூடியொன்றில் நில்லாது.---இதுபோல்
ஒன்றை ஒன்று ஒழிக்கும் பொல்லாது---அதுபோல்
நன்றி என்றுமொரு வாசலும் செல்லாது.

பொய்யது ஒன்றே மெய்யது என்றே---அந்த
வாயது கொண்டே மேய்வது வென்றே—இந்த
அய்யோ மக்கள் ஆய்வது மறந்தே---அந்த
வெய்யது அரசியல் வாழுதே தொடர்ந்தே!

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 16 September 2014

மகனுக்குக் கடிதம்.


அன்புள்ள மகனுக்கு. 

அன்புள்ள மகனுக்கு 
அம்மா எழுதும் கடிதம். 
விடுதி வாழும் அறை வாசம்
வேறெதுக்கு சிறை வாசம்!
உண்ணக் கொஞ்சம் சோறும், உடுத்தத் துணி சேலையும் ;
உறங்கத் தரைப் படுக்கையும்: ஒருகுறையும் இல்லை மகனே! 

நாயொன்று வளர்த்தாயே 
அது நலமா மகனே! 
தாயன்று குடித்த கஞ்சி நாயின்றும் குடிக்குமா மகனே! 
தாய் போலத் தாங்காது
நோய் வந்தால் செலவாகும்.
தாய் எனது பேரிலாவது
நாயை அழைத்து நினைப்பாயா?.

தாய்க்குத் தந்த அன்னத்தட்டு நாய்க்கது வேண்டாம் மகனே! 
வாய்க் கிழிந்து வெட்டுப்படும்  வாயில்லா நாய்ப் பாவம். 
ஓட்டை அடைக்கத் தெரியாது
ஒழுக விடும் கஞ்சி நாயைச்
சாட்டை வீசி அடிப்பாளே
சண்டாளி உன் மனைவி.

தாய் நான் படுத்த பாய் நாய்க்கது வேண்டாம் பாவம்! 
கிழிந்தக் கோரைப் பாய் கிழித்து  
மெலிந்த நாய் புண்படும்.
உதறி விரிக்கப் பழகாது. 
கதறி யழவும் அறியாது
சிதறி அதனைச் சிதையில் கொழுத்தி 
சீக்கிரம் அழித்து விடு மகனே! 

தாய்தான் தன் குளிரை தாங்கும் வலிமை நாய்க்கும் வேண்டாம் மகனே! 
மேல்ப் போர்வை போர்த்தியும் மெத்தைமேல் கிடத்து மகனே! 
வாயில்லா ஜீவனதும் வாடை சொல்லத் தெரியாது மகனே! 

தாய்க்கு  ஊற்றிய தொட்டிக்கஞ்சி 
நாய்க்கும் வேண்டாம் மகனே! 
சேய்க்கு ஆற்றும் சேவை
யெல்லாம் 
நாய்க்கு  ஆற்று நல்ல மகனே! 
நன்றியுள்ள பிராணி அது நாளையது எண்ணும் மகனே! 
என்றும் உன் தாய் நான் ஏங்கும் உந்தன் நலம்தான் மகனே! 

எப்படி நீ செய்வாயோ 
அப்படி நீ செய் மகனே! 
தப்படி நீ வைக்காதே 
ஒப்படி நீ வை மகனே! 
சொற்படி நீ வாழ்வாயே என்றும் என் அன்பு மகனே! 
இப்படிக்கு உன் நலம்விரும்பும் என்றும்  உன் அன்புத்தாய் மகனே! 

கொ.பெ.பி.அய்யா.

Monday, 11 August 2014

அடிமை ஒழிக!

புதிய கீதை -3 (அடிமைத்தனம் ஒழிக)

அடக்கம் அமைதி அழகுதான் பெண்மை.
அடங்க அடிமை பழக்குவது வன்மை.
ஒழுக்கம் பழக்கும் உயர்வுதான் உரிமை.
ஒடுக்கும் பழமை ஒழிந்ததே பெருமை.

மனைவி வந்தவள் மங்கலம் தந்தவளை
துணைவி யானவள் தோழமை
கொண்டவளை.
அடிமை ஆக்குதல் ஆணாதிக்க ஆணவம்.
விடியலைப் பெண்ணே அடைந்ததுதான் நிசம்.

கணவன் என்பதன் கடமைப் பொறுப்பு-
நினைந்து மரியாதை செய்வது
சிறப்பு.
தலைமை என்றத் தலைக்கண வெடிப்பு,
உரிமைப் பறிப்பு என்பதன் கொழுப்பு!

பாசத்தின் அடிமை மோசம் இல்லை.
வேசத்தின் அடிமை தோசம் தொல்லை.
ஆசை மயக்கும் அடிமைக் கொடுமை,
மோசச் செயலது கூசாதார் கயமை.

உண்மை மறந்தும் உறவைப் பிணக்கும்,
தன்மை இழக்கும் பாவக்
கணக்கும்,
உயிரை உயிரே அடிமை யாக்கும்
பயிரை வேலி மேய்வது போலாக்கும்.

மானமும் மனமும் மனிதர் மாண்பு.
நாணமும் நன்றியும் புனிதர் நோன்பு.
அடிமைச் சிறுமை வானமும்
ஏற்காது.
கொடுமைப் பொறுமை கோபம்
தோற்காது.

பெண்ணை மதித்து  தன்னை உயர்த்துவோம்.
விண்ணை வளைத்து விந்தைகள் செய்வோம்.
மண்ணும் விண்ணும் எண்ணும் ஒருமை,
பெண்ணும் ஆணும் சமமெனும் உரிமை.
அடிமை வென்று கடமைகள் நின்றே 
உரிமை சமூகம் வாழ்கவே!

கொ.பெ.பிச்சையா.




  




0