Tuesday, 16 September 2014

மகனுக்குக் கடிதம்.


அன்புள்ள மகனுக்கு. 

அன்புள்ள மகனுக்கு 
அம்மா எழுதும் கடிதம். 
விடுதி வாழும் அறை வாசம்
வேறெதுக்கு சிறை வாசம்!
உண்ணக் கொஞ்சம் சோறும், உடுத்தத் துணி சேலையும் ;
உறங்கத் தரைப் படுக்கையும்: ஒருகுறையும் இல்லை மகனே! 

நாயொன்று வளர்த்தாயே 
அது நலமா மகனே! 
தாயன்று குடித்த கஞ்சி நாயின்றும் குடிக்குமா மகனே! 
தாய் போலத் தாங்காது
நோய் வந்தால் செலவாகும்.
தாய் எனது பேரிலாவது
நாயை அழைத்து நினைப்பாயா?.

தாய்க்குத் தந்த அன்னத்தட்டு நாய்க்கது வேண்டாம் மகனே! 
வாய்க் கிழிந்து வெட்டுப்படும்  வாயில்லா நாய்ப் பாவம். 
ஓட்டை அடைக்கத் தெரியாது
ஒழுக விடும் கஞ்சி நாயைச்
சாட்டை வீசி அடிப்பாளே
சண்டாளி உன் மனைவி.

தாய் நான் படுத்த பாய் நாய்க்கது வேண்டாம் பாவம்! 
கிழிந்தக் கோரைப் பாய் கிழித்து  
மெலிந்த நாய் புண்படும்.
உதறி விரிக்கப் பழகாது. 
கதறி யழவும் அறியாது
சிதறி அதனைச் சிதையில் கொழுத்தி 
சீக்கிரம் அழித்து விடு மகனே! 

தாய்தான் தன் குளிரை தாங்கும் வலிமை நாய்க்கும் வேண்டாம் மகனே! 
மேல்ப் போர்வை போர்த்தியும் மெத்தைமேல் கிடத்து மகனே! 
வாயில்லா ஜீவனதும் வாடை சொல்லத் தெரியாது மகனே! 

தாய்க்கு  ஊற்றிய தொட்டிக்கஞ்சி 
நாய்க்கும் வேண்டாம் மகனே! 
சேய்க்கு ஆற்றும் சேவை
யெல்லாம் 
நாய்க்கு  ஆற்று நல்ல மகனே! 
நன்றியுள்ள பிராணி அது நாளையது எண்ணும் மகனே! 
என்றும் உன் தாய் நான் ஏங்கும் உந்தன் நலம்தான் மகனே! 

எப்படி நீ செய்வாயோ 
அப்படி நீ செய் மகனே! 
தப்படி நீ வைக்காதே 
ஒப்படி நீ வை மகனே! 
சொற்படி நீ வாழ்வாயே என்றும் என் அன்பு மகனே! 
இப்படிக்கு உன் நலம்விரும்பும் என்றும்  உன் அன்புத்தாய் மகனே! 

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment